My Mobile Studios: கன்னித் தமிழும் கணினியும்

Thirukkural

திருக்குறள்-1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

[எழுத்துக்கள் தோன்றுவதற்கு காரணமாக இருப்பது முதல் எழுத்துக்கள் அவை மெய்எழுத்துக்களும், உயிரெழுத்துக்களும் ஆகும். அது போல உலகம் தோன்றுவதற்கு காரணமாக இருப்பது ஆதி யாகிய மெய்ப்பொருளும், பகலவன் ஆகிய சூரியனும் ஆகும்.]

Friday, September 18, 2015

கன்னித் தமிழும் கணினியும்


உயிரும், மெய்யும் சேர்ந்து உயிர்மெய்யாகி, ஆயுதமாக விளங்கும் தமிழ் மொழியைப் பேசும் பொழுது குறைந்த மூச்சு காற்றே விரயம் ஆகுவதால் உடல் நலத்திற்குத் தீங்கு இல்லாமல் சித்தர்களால் வகுக்கப்பட்டதே தமிழ் எழுத்துக்கள்.

தமிழ் எழுத்துக்கள் ஒலிப்பியல் எழுத்து முறையைக் கொண்ட குறுக்கம், அளபெடை மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துக்கள் ஒலிக்கப் படுகின்றன. உலகில் எந்த மொழிக்கும் இல்லாத பொருளுக்கு இலக்கணத்தை வகுத்து ஐந்இலக்கணம் என்று போற்றப்படுவதும், மொழியின் சிறப்பாக உலகத்தாரால் பக்தியாகப் போற்றப்படுவதும் மொழியின் சிறப்பை அறியலாம்.

முதலில் பிராமி எழுத்தாகத் தோன்றி வட்டெழுத்தாக மாற்றம் பெற்று கல்வெட்டுகளிலும், ஓலைச்சுவடுகளிலும், ஒரு சில சமஸ்கிருத எழுத்தைக் கிரந்த எழுத்தாகவும் எழுதப்பட்டது.

பிறகு வீரமாமுனிவரின் அறிவுரைப் படி இரட்டைக் கொம்பு மாற்றம் செய்யப்பட்டன. 1977 ஆம் ஆண்டு எம். ஜி. இராமசந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் ஈ. வெ. இராமசாமி நாயக்கரால் பரிந்துரைக்கப்பட்ட கார மற்றும் கார உயிர்மெய் எழுத்துகளில் சீர்திருத்தம் செய்யப்பட்டது ஆனால் கர எழுத்துகளில் சீர்திருத்தம் செயல்படுத்தப்படவில்லை.

உலக அரங்கிலும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா, மொரீசியசு ஆகிய நாடுகளில் தமிழுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றளவும் பேச்சளவிலும், ஏட்டளவிலும் இந்திய அரசின் முதல் செம்மொழி அங்கீகாரம் பெற்று திராவிட மொழிக் கலப்பு இல்லாமல் தனித்துக் கன்னித் தமிழாகக் கணினியிலும் வலம் வருகின்றது.


கணினியில் தமிழ் தோன்றியது 1980 ஆம் ஆண்டுகளில் அப்பொழுதுதான் தனி மேசைக் கணினிகள் வரத் தொடங்கியது. தனக்கெனத் தனித் இயங்கு தளங்களாகக் கொண்டிருந்தன. பின்னர் மக்ஒ.எஸ், மைக்ரோசாப்ட், ஒ.எஸ்.2 வகை இயக்கு தளமுடைய கணினிகள் கிட்டத் தட்ட ஒரு பொதுக் கருவியாக 1983-1984 ல் வெளிவரத் தொடங்கியபோது தமிழ்க் கணினி வல்லுநர்கள் தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளைத் தொடங்கினர்.

கணினியில் தமிழில் ஆவணங்கள் எழுதுவதற்கு முதலில் மென்பொருள் ஆதமி, ஆதவின், பாரதி என அடுத்து அடுத்து வெளிவரத் தமிழில் எழுதி அச்சில் வெளியிடவும் பயன் உள்ளதாக அமைந்ததால் பயனாளர்களிடம் பிரபலமாகத் தொடங்கியது.

1990 முற்பகுதியில் கணினியில் தமிழில் எழுத்துரு வருகையால் யூனிக்சு, ஆப்பிள் தனது இயங்குதளத்தில் தமிழில் எழுதும் வசதியைக் கொண்டுவந்தன. இவை எழுத்துப்பெயரப்பு முறையை அடிப்படையாகக் கொண்டது எ.காட்டாக விசைப்பலகையில் ammaa எனத் தட்டச்சு செய்யும் போது திரையில் அம்மா எனத்தோன்றும். தொடர்ந்து மயிலை, பாமினி எழுத்துருக்கள் தொடர்ந்து பயன் பாட்டிற்கு வந்தன இதனால் ஏற்கனவே ஆங்கிலம் மூலம் கிடைக்கும் எழுத்துகோர்ப்பு, கணிக்கும் அட்டவணை ஆக்கி ஆகிய மென்பொருட்களைத் தமிழில் பாவிக்க முடிந்தது. இதனால் ஆதமி போன்ற மென்பொருட்களின் தேவை குறைந்தன.

தமிழ் எழுத்துருக்கள் தமிழ் தட்டச்சு இயந்துதரத்தின் அடிப்படையில் கணினிவிசைப் பலகை அமைக்கப்பட்டு இருந்ததால் தமிழ் தட்டச்சு தெரியாதவர்கள் அதிவேகமாக இயங்கமுடியவில்லை. தங்கள் தேவைக்கு ஏற்ப புதிய எழுத்துருக்கள் உருவாக்கிக் கொண்டதால் எந்த ஒரு தகுதரத்தையும் கடைப்பிடிக்கவில்லை. இதனால் ஆங்கில மூல மென்பொருட்களில் நூறு விழுக்காடு சரியாக ஒத்து இயங்கவில்லை.

இதனைத் தொடர்ந்து 1986 ல் கணினியை வலையில் இணைத்து மின்னஞ்சல் அனுப்பும் முறை வந்தாலும் தமிழில் பல எழுத்துரு தகுதரத்தை கடைப்பிடிக்காமல் இருந்ததால் மின்னஞ்ல் அனுப்புவதும், பெறுவதும் கடினமாக இருந்தது. இந்த இடரை நீக்க மதுரை என்னும் மென்பொருள் தோன்றியது இதில் ஒரு கோப்பில் தமிழ் ஆக்கங்களைத் தமிழ் ஒலிப்பை ஆங்கில எழுத்து முறைப் படி சேமித்து அதில் மதுரை கட்டளையை இயக்கும்போது தமிழ் எழுத்தாக மாற்றம் பெறும் ஆனால் அதிகம் பயன்பாட்டுக்கு வரவில்லை. முரசு அஞ்சல் தனித்தீர்வாக மேம்படுத்தப்பட்ட எழுத்துரு, எழுதி, மின்னஞ்சல் செயலி, விசைப்பலகை செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம் மின்னஞ்சல் பயன்பாடு இலகுவாகப்பட்டது.

அடுத்த புரட்சியாக 1990 ல் வைய விரி வலை மூலம் கோபர், மொசையிக் என்ற வடிவங்களில் தகவல் பரிமாறும் தளங்கள் உருவாகி வலைக் கணினி ஒரு படி உயர்ந்தது. விரைவாக மீயுரைக் குறியுடன் நெற்ஸ்கேப் உலாவிகளில் முழு வடிவம் பெற்று இணைய யுகம் உருவானது. இதன் பயனாக தமிழ் மற்றும் ஆங்கிலமும் கலந்த இணையத்தலங்கள் உருவாகத் தொடங்கின.

முன்னணி தமிழ் பத்திரிக்கைகளும், இதழ்களும் தமிழ் மொழியில் இணையத்தில் வெளியிட்டு கால் பதித்தன. 1990 ல் இயங்கு எழுத்துரு என்ற விடயம் பாவனைக்கு வந்தது. இதன் மூலம் எந்த ஒரு எழுத்துருவும் தரவிறக்கம் செய்யாமல் வலையில் படிக்கமுடிந்தது.

1995 ல் தமிழ்.நெட் இணையத்தில் மடலாடற்குழுவைத் தமிழில் ஏற்படுத்தி அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் இணையத்தில் கலந்துரையாடல்களும், தமிழ் மொழியைப் பற்றியும், தமிழ்க் கணினியை பற்றியும் தகவல்கள் பரிமாறப்பட்டது. இதன் மூலம் தமிழ் எழுத்துருவுக்கு ஒரு தகுதரத்தை கொண்டுவந்து தஸ்கி என்று அழைத்தார்கள்.

இந்தநேரத்தில் ஒருங்குறி என்ற அமைப்பு உலக மொழிகள் அணைத்தும் ஒன்று இணைக்கச் செயல்பட்டபோது ஏற்கனவே கொண்டு வந்த தகுதரத்துடன் ஒத்துப்போகவில்லை. அரசு கணினியில் தமிழ் சீர்திருத்தம் கருதி தமிழக அரசு மாநாட்டை அமைத்து அதில் தமிழ்நெட்99 என்ற ஒருங்குறியை அரசு தேர்வுசெய்தது, தற்போது அணைத்து நாட்டுத் தமிழ் பிரிவுகளும் பயன்படுத்த தொடங்கிப் பாவனைக்கும் வந்துவிட்டது. இதன் தொடர்ச்சியாகத் தமிழ்நெட் என்ற பெயரில் ஆண்டுதோறும் மாநாடுகள் நடை பெறுகின்றன.

ஈ.கலப்பை, குறள் செயலி மூலம் ஒருங்குறி எழுத்துருவா, தகுதர எழுத்துருவா அல்லது ஆங்கிலமா என்று தெரிவுசெய்யும் வசதியும் உண்டு. கணினி மொழியைத் தமிழ் மொழியில் எழுத "எழில்" மென்பொருள் பயன்படுத்தப் படுகிறது.

தற்போது இருக்கும் தொழில்நுட்பத்தின் மூலம் கல்வி, வேலைவாய்ப்புச் செய்திகள், தினசரி செய்திகள், தமிழ்ப் பாடல்கள், கணினி விளையாட்டுகள் அனைத்துத் தகவல்களும் இணையத்தில் தமிழ் மொழியிலே கிடைக்கின்றன.

சமூக வலை தலங்களால் தனது கருத்தைப் பதிவு செய்வது வரம் ஆக இருந்தாலும் உண்மைக்கு மாராகக் கருத்தை வெளியிடுவதைத் தவிர்க்கப்பட வேண்டும்.

உலகமொழிகளைக் கணினிமொழி பெயர்ப்பு உதவியுடன் தமிழ் மொழியில் அறிவதும் ஒரு முன்னேற்றம்தான். இணையத்தில் தமிழில் வாணி எழுத்துப்பிழை திருத்தி, நாவி தமிழ்ச் சந்திப்பிழை திருத்தி  வளர்ச்சி பெற்ற அளவிற்கு இணையம் இல்லா கணினிப் பயன்பாட்டில் முன்னேற்றம் தேவையாக உள்ளது. 

கன்னித் தமிழால் கணினியில் இணைந்து புதியதோர் உலகைப் படைத்திடுவோம்

-நன்றி-

இப்படைப்பு, வலைப்பதிவர் திருவிழா-2015 மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கியபோட்டிகள்-2015க்காவே எழுதப்பட்டது. இது என் சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வெளியிடப்படவில்லை என்றும் இப்போட்டிக்கான முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடப்படமாட்டாது என்றும் உறுதி கூறுகின்றேன்.

14 comments:

 1. கணினியில் தமிழ் வளர்ச்சி பற்றி அறியாத பல தகவல்கள் அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றிகள் சகோதரரே.

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், அன்புக்கும் வாழ்த்துகள்.

   Delete
 2. விரிவான செய்திகளுடன் சிறப்பானதொரு கட்டுரைக்கு வாழ்த்துகள் வெற்றி பெற...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், அன்புக்கும் வாழ்த்துகள்.

   Delete
 3. தமிழ் கணினியில் எவ்வாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் வளர்ச்சிப் பெற்றது என்பதை அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள்.
  வெற்றிக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. ஐயா தங்களின் கருத்துக்கும், அன்பிற்கும் வாழ்த்துகள். தங்களின் படைப்புகள் இன்னும் படிக்கவில்லை விரைவில் படித்துவிடுகிறேன்.

  ReplyDelete
 5. அற்புதமான கட்டுரை. அருமையான சொல்லாடல். பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஐயா வணக்கம், தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் வாழ்த்துகள்.

   Delete
 6. வணக்கம்! நண்பரே! கணினி ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு வளர்ந்தது என்று அழகாக சொல்லியுள்ளீர்கள் அருமை!

  வாழ்த்துக்கள்! நன்றி

  ReplyDelete
  Replies
  1. நண்பரே!! வணக்கம்! தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் வாழ்த்துகள்.

   Delete
 7. கணினியில் தமிழ்வளர்ந்தவிதமும் அதற்கானவிளக்கமும்
  அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் வாழ்த்துகள்.

   Delete
 8. கட்டுரையை ரசித்தேன்

  ReplyDelete

write your valuable thoughts here...